உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் யாகசாலை பூஜைகளுடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகப் பூர்வாங்க பூஜைகளின் ஒரு பகுதியாக, ஐந்தாம் நாளான இன்று காலை கோவில் வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற பொற்றாமரைக் குளத்தில் மங்கல இசை முழங்கச் சிறப்புச் சடங்குகள் நடைபெற்றன. இதில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று 10 விதமான தூய்மை நீராடலான 'ஆச்சார்ய தசவித ஸ்நானம்' மேற்கொண்டனர்.
பொற்றாமரைக் குளத்தில் நடைபெற்ற இந்தத் தூய்மை நீராடலைத் தொடர்ந்து, திருமுறை விண்ணப்பமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனை பேரொளியும் நடைபெற்றது. பின்னர் அங்குத் திரண்டிருந்த பக்தர்களுக்குத் திருநீறும் திருவமுது பிரசாதமும் வழங்கப்பட்டன.
வடக்கு ஆடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள 56 யாகசாலைகளில் உள்ள 184 யாக குண்டங்களில் சிறப்பு ஹோமங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட 1,008 லிட்டர் கங்கை நீர் மற்றும் புண்ணிய நதிநீர்கள், 96 வகையான ஹோமப் பொருட்கள் மற்றும் 514 சுவாமி சிலைகளுக்கான பித்தளை கலசங்களுடன் கும்பாபிஷேகப் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- Madurai
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – சிவாச்சாரியார்கள் ‘தசவித ஸ்நானம்’
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 5-ஆம் நாள் சிறப்பு நிகழ்வு சிவாச்சாரியார்கள் ‘தசவித ஸ்நானம்’
