விருதுநகர் மாவட்டத்தின் 26-வது மாவட்ட ஆட்சியராகவும், மாவட்டத்தின் 2-வது பெண் மாவட்ட ஆட்சியராகவும் திருமதி சரண்யா அரி அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தான தனது இலக்குகளையும் திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
"நீர்இன்றி அமையாது உலகு" என்பதற்கேற்ப, மாவட்டத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் புனரமைப்பதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் தமது முதன்மை இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போல சி.எஸ்.ஆர் (CSR) நிதி மற்றும் பொதுமக்களின் பங்கேற்போடு நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகள் 'மக்கள் இயக்கமாக' நடத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்குத் தமிழக அரசின் நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்று சேர்வது உறுதி செய்யப்படும் என்றார்.
சிவகாசியின் உலகப் புகழ்பெற்ற பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட ஆட்சியர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை ஒருங்கிணைத்துத் தீவிரக் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், விபத்துகளைத் தவிர்க்க ஆலைகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் எனவும் எச்சரித்தார்.
சமூக நலத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு ஊட்டச்சத்து திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார். மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், இடைநின்ற மாணவர்களை மீட்டு மீண்டும் கல்வியில் இணைக்கவும் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.
முதலமைச்சரின் கனவுக்கு ஏற்ப நிர்வாகம் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும் எனக் கூறிய ஆட்சியர் சரண்யா அரி, "மக்கள் என்னைத் தேடி வர வேண்டிய அவசியமில்லை; அதிகாரிகளுடன் சேர்ந்து நானே மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பேன்" என உறுதியளித்தார்.
- Virudhunagar
விருதுநகர் மாவட்டத்தின் 26-வது ஆட்சியராக சரண்யா அரி பதவியேற்பு
விருதுநகர் மாவட்டத்தின் 26-வது ஆட்சியராக சரண்யா அரி பதவியேற்பு
