மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள 'மன்டாடி' திரைப்படத்தை, மதுரை மாட்டுத்தாவணி வெற்றி திரையரங்கில் படக்குழுவினருடன் ரசிகர்களும் இணைந்து கண்டுகளித்தனர். படத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் சூரி, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மதுரை மக்களின் பேராதரவுடன் 'மன்டாடி' திரைப்படம் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிகரமாக ஓடி வருவதாகவும், ஒரு வருட கால கடுமையான உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவெனவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
படப்பிடிப்பின் போது கப்பலில் இருந்து கீழே விழுந்தது உள்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், படம் வெளியான பிறகு அந்த வலிகள் அனைத்தும் தற்போது மகிழ்ச்சியாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்படத்தில் தமக்குக் கிடைத்த வரவேற்பு வாழ்க்கையில் மிக முக்கியமானதாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
பெரிய ஸ்டாரின் மகன் என்ற எந்தவித பந்தாவும் ஜேசன் சஞ்சய்யிடம் கிடையாது என்றும், அவரிடம் தெளிவு, பணிவு, நிதானம் உள்ளதால் எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்திற்கு வருவார் எனவும், அவருடன் இணைந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணலாம் எனவும் சூரி தெரிவித்தார்.
'விடுதலை' திரைப்படத்தைப் போலவே 'மன்டாடி' படத்தையும் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தமை தமக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது என்றும் சூரி பெருமிதத்துடன் கூறினார்.
- Madurai
ரசிகர்களுடன் ‘மன்டாடி’ திரைப்படத்தைக் கண்டுகளித்தார் நடிகர் சூரி
மதுரையில் ரசிகர்களுடன் ‘மன்டாடி’ திரைப்படத்தைக் கண்டுகளித்தார் நடிகர் சூரி
