மதுரை செல்லூர் கண்மாய் மற்றும் பந்தல்குடி கால்வாயில் நடைபெற்று வரும் தூய்மை மற்றும் மேம்பாட்டுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்தார்.
பந்தல்குடி கால்வாயில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்டுச் செல்லூர் கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உறுதியளிப்பின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு நடத்தி இது உறுதி செய்யப்படும்.
பந்தல்குடி கால்வாயில் விடுபட்டுள்ள மீதமுள்ள சுமார் 200 மீட்டர் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும், மழைக்காலத்திற்குள் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் ஒருங்கிணைந்த பணிகளை விரைவுபடுத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 நாள்களுக்குள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தேனி முதல் ராமநாதபுரம் வரை உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பிரச்சினை என்பதால், மாவட்ட வாரியாகத் தனித்தனித் திட்டங்களைச் செயல்படுத்தாமல், வைகை ஆற்றைப் பாதுகாப்பதற்கான முழுமையான ஒருங்கிணைந்த சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் முதல்வரைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, துணை மேயர் தி. நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் மற்றும் பல்வேறு பகுதிச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
- Madurai
மதுரையில் செல்லூர் கண்மாய் ஆய்வு
மதுரையில் செல்லூர் கண்மாய் ஆய்வு
