விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப் பணிகளைப் பெற்றிடும் வகையில் நடைபெற்ற 'தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சி'யில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மாவட்டத்தில் உள்ள குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இரு நாட்கள் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகள் அரங்குகளை அமைத்துத் தங்களது உற்பத்திப் பொருட்கள், சேவைகளைக் காட்சிப்படுத்தினர். மேலும், ஒப்பந்தப் பணிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்து நிறுவனப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் டான்சி, காதி கிராம தொழில் வாரியம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், மத்திய ரயில்வே, இந்திய அஞ்சல் துறை, கல்பாக்கம் அனல் மின் நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் இந்திய கனரக வாகன உற்பத்தித் தொழிற்சாலை உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன.
உள்ளூர் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்து புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று வளர்ச்சியடைய இந்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு தொழில் நிறுவன இணை இயக்குநர் தயாளன், தமிழ்நாடு தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், உதவி இயக்குநர் கிரண் தேவ் சடு லூரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- Virudhunagar
தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சி
விருதுநகரில் தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சி
