மதுரை ரயில்வே காலனி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட புகழ்பெற்ற இருதய ஆண்டவர் கத்தோலிக்க தேவாலயம் நூறாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழாத் தொடக்க நிகழ்ச்சிகள் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றன.
பங்குத்தந்தை ஜான் திரவியம் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில், மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் மேதகு டாக்டர் அந்தோணிசாமி சவுரிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நற்செய்தி வழங்கினார். தேவாலய வளாகத்தில் கொடியேற்றப்பட்டு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து, கடந்த 50 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தேவ நற்கருணை ஆராதனை செய்யும் சுரங்கம் போன்ற பழமையான இடம் தேவாலயத்தின் அடிப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. அதனை மீண்டும் புனரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பேராயர் அந்தோணிசாமி சவுரிமுத்து, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதைப் போல 7.5% இடஒதுக்கீட்டை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், தவெக தலைவர் ஜோசப் விஜய் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- Madurai
இருதய ஆண்டவர் தேவாலயம் நூற்றாண்டு விழா
மதுரை இருதய ஆண்டவர் தேவாலயம் நூற்றாண்டு விழா
