விருதுநகர் நகராட்சிக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வார்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதும், பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் வார்டு பணிகள் நடைபெறாமல், அதிகாரிகள் பரிந்துரைக்கும் பணிகள் பொது நிதியில் வேகமாக நடைபெறுவது ஏன் என உறுப்பினர்கள் முத்துலெட்சுமி, ஜெயக்குமார், முத்துராமன் உள்ளிட்டோர் கடும் கேள்வி எழுப்பினர். மேலும், மறைமுகமாக உயர்த்தப்பட்ட சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முறையிட்டனர்.
பழைய அருப்புக்கோட்டை சாலையில் புதிய கால்வாய் கட்டும் பணி தாமதமாவதைக் கண்டித்து, உறுப்பினர் பேபி கூட்டரங்கில் தரையில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெற்றதும் பணி செய்யப்படும் என ஆணையாளர் உறுதியளித்ததைக் தொடர்ந்து அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.
காலை உணவுத் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டிய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், குடிநீர் விநியோகம், சாலை வசதி, வாறுகால் அமைப்பு, ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- Virudhunagar
விருதுநகர் நகராட்சிக் கூட்டத்தில் காரசார விவாதம்
விருதுநகர் நகராட்சிக் கூட்டத்தில் காரசார விவாதம்
