மதுரை அண்ணாநகர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பாயா ஜாஷபீகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மகளிரணி தேசிய துணைத் தலைவர் ரைஹானத், செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
கேரளாவில் விஜயால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும், கேரள மக்களின் அரசியல் மனநிலை எப்போதும் இடதுசாரி அல்லது வலதுசாரிகளாக மட்டுமே இருக்கும் என்பதால் அங்குப் புதிதாக வேறு யாருக்கும் வாய்ப்பு கிட்டாது என ரைஹானத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் முகமாக ராகுல் காந்திதான் இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடக் கூடுதல் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குதல், பொது இடங்களில் சானிட்டரி நாப்கின் விநியோகம் மற்றும் அழிக்கும் கருவிகளை நிறுவுதல், தாலுகா அளவில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்களை மாதந்தோறும் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எஸ்டிபிஐ மகளிர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- Madurai
எஸ்டிபிஐ மகளிரணி தேசிய துணைத் தலைவர் பேட்டி
எஸ்டிபிஐ மகளிரணி தேசிய துணைத் தலைவர் ரைஹானத் பேட்டி-கேரளா, இந்தியா – விஜயால் ஒன்றும் செய்ய முடியாது
