விருதுநகர் அருகே பாவாலியில் உள்ள தனியார் அப்பளக் கம்பெனியில் மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்ததைக் கண்டித்து, அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் தென்னம நல்லூரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர், விருதுநகர் சுந்தரமூர்த்திக்குச் சொந்தமான அப்பள கம்பெனியில் தங்கிப் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு தூங்கச் சென்ற அவர், காலையில் எழுந்திருக்காத காரணத்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
விஜயராஜின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையான மரணமா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் ஆலை உரிமையாளர் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உறவினர்களை சமாதானப்படுத்திய போலீசார், விஜயராஜின் உடலை உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
பாவாலி அப்பள கம்பெனியில் தொழிலாளர் மர்ம மரணம்
விருதுநகர் அருகே பாவாலி அப்பள கம்பெனியில் தொழிலாளர் மர்ம மரணம்
