பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகரில் கோலாகலமாகத் தொடங்கின.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி வரும் வரும் 30-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட மொத்தம் 10 இடங்களில் இப்போ போட்டிகள் நடைபெறவுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 38 வகையான போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு வில்வித்தை, வுஷீ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான கயாக்யிங் மற்றும் கேனோயிங் உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000-த்துடன் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. மேலும், மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு அதிகபட்சமாக ரூ. 1,00,000 வரையிலும், குழுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 75,000 வரையிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், பயிற்சியாளர்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
விருதுநகரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – அமைச்சர் ஜெகதீஸ்வரி துவக்கி வைத்தார்
