மதுரையில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளான இன்று பெய்த தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரையில் கடந்த சில தினங்களாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில் அனல் காற்று வீசி வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மாட்டுத்தாவணி, கே.கே.நகர், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம் உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திடீர் மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவது மதுரை மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள், மாலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் விற்பனைக்காக சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாலை வேளையில் திடீரெனக் கொட்டித் தீர்க்கும் மழையால் சிலைகள் மற்றும் பொருட்கள் நனைந்து சேதமடையாமல் இருக்க, வியாபாரிகள் தார்ப்பாய்கள் மற்றும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் திணற வேண்டியுள்ளது.
கடைசி நேரத்தில் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், மழையின் காரணமாகப் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர். மழை சற்று ஓய்ந்து பொதுமக்கள் வழக்கம் போல் விநாயகர் சிலைகள் மற்றும் பொருட்களை வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.
- Madurai
இரு தினங்களாக கனமழையால் குளிர்ச்சியான சூழல்
மதுரையில் இரு தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல்
