மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா நெருங்கி வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அனுமதி பாஸ்கள் வழங்குவதில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை என அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
2018-ஆம் ஆண்டு தீவிபத்து ஏற்பட்ட பிறகு, முதலமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் அமைச்சர்களின் வழிகாட்டுதலின்படி, வீரவசந்தராயர் மண்டபத்திற்குத் தேவையான கற்களைத் தமிழ்நாட்டிலேயே கண்டறிந்து தொன்மை மாறாமல் புனரமைப்புப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விரும்பினாலும், அழைப்பிதழில் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்தும், அனுமதி அட்டைகள் (பாஸ்) எண்ணிக்கை தொடர்பாகத் தினமும் மாறுபட்ட தகவல்கள் வெளியாவது குறித்தும் கவலை தெரிவித்தார். குறிப்பாக, மதிக்கத்தக்க நன்கொடைதாரர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு முறையாக அழைப்பிதழ் சென்று சேர்ந்ததா என்பது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
1963-ஆம் ஆண்டு காலஞ்சென்ற பிடிராஜன் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றதும், மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழிவந்த தங்கள் குடும்பம் என்றைக்கும் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்துப் பார்த்ததில்லை எனத் தெரிவித்தார். ஆன்மீகத் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதிலும், அரசியல் அதில் கலக்கக் கூடாது என்பதிலும் தாங்கள் எப்போதும் கவனமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பேசிய மற்றொரு அறங்காவலர் குழு உறுப்பினரான டாக்டர் சீனிவாசன், விழா சிறப்பாக நடைபெறும் என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- Madurai
மீனாட்சி அம்மன் குடமுழுக்கு வெளிப்படைத்தன்மை இல்லை
மீனாட்சி அம்மன் குடமுழுக்கு வெளிப்படைத்தன்மை இல்லை – ருக்மணி பழனிவேல்ராஜன்
