உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா (மகா கும்பாபிஷேகம்) பக்தி பரவசத்துடனும், வெகு விமரிசையாகவும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 11 முதல் இன்று வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கங்கை உள்ளிட்ட 8 புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 2,000 லிட்டர் புனித நீருடன், 96 வகையான ஹோமப் பொருட்கள் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் கலந்துகொண்டு பூஜைகளை முன்னின்று நடத்தினர்.
இன்று காலை 7.40 மணிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்குச் சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நிறைவேற்றப்பட்டது.
கோவில் வளாகம் 5 லட்சம் டன் வண்ண மலர்கள் மற்றும் லேசர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காகப் பாதுகாப்புப் பணியில் 6,500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குடிநீர், தற்காலிகக் கழிவறைகள், 54 மருத்துவ முகாம்கள் மற்றும் 275 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்ட நெரிசலைக் கண்காணிக்க சிசிடிவி மற்றும் எஃப்.ஆர்.எஸ் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதோடு, குழந்தைகளின் பாதுகாப்புக்காகக் கண்காணிப்புப் பட்டைகளும் வழங்கப்பட்டன.
மதுரையில் 5 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்களும், 55 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு, சிறப்பு ரயில்களும் 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும் இயக்ககப்பட்டன. மேலும், மதுரையின் 51 முக்கிய சந்திப்புகளில் எல்.இ.டி திரைகள் மூலம் கும்பாபிஷேகம் நேரலை செய்யப்பட்டது. திருக்குட நன்னீராட்டு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- Madurai
மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
