ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், தீவன விலை உயர்வு மற்றும் வறண்ட வானிலையால் பால் உற்பத்தித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கூறினார். ஆவினை விட தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 8 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வழங்குவதால், உற்பத்தியாளர்கள் தனியார் வசம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, முதலமைச்சர் முன்பு அறிவித்தபடி பசும்பால் லிட்டருக்கு 44 ரூபாயும், எருமைப்பாலுக்கு 60 ரூபாயும் கொள்முதல் விலை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கடந்த ஆட்சியில் விலை குறைப்பால் ஆவினுக்கு ஏற்பட்ட 1,800 கோடி ரூபாய் இழப்பை அரசு வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவின் கூட்டுறவு சங்கத் தேர்தலை வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
