திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள பிரபல பலகார கடையின் குடோனில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஓட்டு வீடு மற்றும் பலகார உபகரணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
நாகல்நகரைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான ‘ஸ்ரீ ஜிலேபி கிருஷ்ண ஐயர்’ கடைக்கான பலகார தயாரிப்பு குடோன், அப்பகுதியின் 3-வது தெருவில் இயங்கி வருகிறது. இன்று மதியம் பணியாளர்கள் உணவு இடைவெளிக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், குடோனில் எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டு மளமளவெனப் பற்றி எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்குப் பரவாதவாறு தடுத்து, தீவிரப் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் குடோனில் இருந்த பலகார மூலப்பொருட்களும், ஓட்டு வீடும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இத்தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது அடுப்பிலிருந்து பரவியதா என்பது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
