மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் விஜய்க்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் முதல்வரின் பேச்சில் எந்த துக்கமும் தெரியவில்லை என்றும், அவர் சினிமா கிளைமாக்ஸ் காட்சியில் பேசுவது போல ஆணவத்துடன் பேசுகிறார் என்றும் அவர் சாடினார். “விஜயகாந்துடன் விஜயை ஒப்பிடாதீர்கள்; விஜயகாந்த் நிஜ வாழ்க்கையில் நடிக்க மாட்டார்” என்று குறிப்பிட்ட அவர், “Reel less work more” என முதலமைச்சர் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் கட்சிக்கு இழுப்பது ‘குதிரை பேரம்’ மற்றும் ‘ஊழல்’ என்று கூறிய தினகரன், “ஆடு, மாடு திருடுவது போல எம்.எல்.ஏ.க்களைத் திருடுகிறார்கள். உண்மையில் விஜய் தான் ஒரிஜினல் களவாணி; த.வெ.க. தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாச கார சக்தி” என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
எதிர்க்கட்சிகளைச் சுரண்டுவதைத் தவிர்த்து, மக்கள் பிரச்சனைகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
