திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற த.வெ.க. வழக்கறிஞர்கள் இணைப்பு விழாவில் பேசிய தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
“திமுக, அதிமுக தலைமைகள் சுயநலத்திற்காக இணைந்து செயல்படுவதால், அந்தத் தொண்டர்கள் நம்பிக்கை இழந்து தவெக -வில் இணைந்து வருகின்றனர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில்கூட திமுக இந்த அளவிற்கு அழிவைச் சந்தித்ததில்லை. இது அந்த கட்சிக்கு ஏற்பட்ட பேரழிவு” என்று அவர் குறிப்பிட்டார்.
கரூர் உயிரிழப்பு விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கரூரில் நடந்தது மிகப்பெரிய சதி. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இறந்தபோது கருணாநிதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து ஜெயின் கமிஷனிடம் விடை தெரியாதது போலவே, கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், தவெக கொள்கை ரீதியாக எந்தச் சமாதானத்தையும் செய்து கொள்ளாது என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தவெக பெரும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, “அவர் காலத்திற்கு ஏற்றார் போல வளைந்து செல்பவர்” என அமைச்சர் விமர்சித்தார்.
