மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பாஜக ஓபிசி அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எதிர்க்கட்சிகள் எத்தனை அணிகள் அமைத்தாலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று சவால் விடுத்தார். இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மோடிக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி வழங்கியதை சுட்டிக்காட்டிய அவர், இதேபோல் கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் அரசு பணி வழங்கப்பட வேண்டும் என்றும், முதல்வர் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய நயினார் நாகேந்திரன், முதல்வரின் செயல்பாடு சினிமா வசனம் போல இருப்பதாக விமர்சித்தார்.
தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டையும் சமமாகவே மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்துப் பேசியவர், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயல்களை அரசு தவிர்க்க வேண்டும் என எச்சரித்தார்
