கல்வியே ஒரு தலைமுறையின் எதிர்காலம் என்ற உயரிய நோக்கத்துடன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை அவர்கள், ‘தளபதி விஜயின் கல்விக் கரம்’ என்ற புதிய கல்வி உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
பெற்றோரை இழந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, தனது இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை முழுமையாக இக்கல்வி உதவிக்காக அவர் வழங்கியுள்ளார்.
மதுரை வடக்கு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் கல்விப் பயணம் பொருளாதாரக் காரணங்களால் தடைபடக் கூடாது என்பதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யப்படும் நடைமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தனது ஊதியத்தை மாணவர்களின் கல்விக்காக வழங்கிய எம்.எல்.ஏ.-வின் இந்த சமூக அக்கறைமிக்க செயலுக்கு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அதிகப்படியான மாணவர்களைச் சென்றடையச் செய்யப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்
