மதுரை மாநகராட்சி திமுக மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமைச்சர் நிர்மல்குமார் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சவால் விடுத்துள்ளார்.
வழக்கறிஞர்கள் நியமனத்தில் 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் மீது தவெக -வினர் வழக்கு தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜெயராமன், திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்களது சொத்து பட்டியலை வெளியிடத் தயார் என்றும், அமைச்சர் தனது சொத்து பட்டியலை வெளியிடத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், மதுரை மாநகராட்சியில் 200 கோடி வரி முறைகேடு என்பது பொய்யான தகவல் என்றும், சொத்து வரி முறைகேடு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மட்டுமே என்றும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மதுரை எம்பி சு. வெங்கடேசன், தவெக -விடம் பதவி வாங்க நழுவிப் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் வெள்ளைக்கல் குப்பைமேடு விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், மக்கள் பிரச்சனைக்கு வாயைத் திறக்காமல், அரசியல் பேசுவதற்கு மட்டுமே அமைச்சர் முனைப்பு காட்டுவதாகவும் ஜெயராமன் காட்டமாக விமர்சித்தார்.
