விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு “போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் மாபெரும் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பேசுகையில், முதலமைச்சர் விஜயின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளித்தார்.
“ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பது முதல், உயர்கல்வி கற்பது வரை மாணவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் கேளுங்கள்; அதற்கு விஜய் அண்ணன் தயாராக இருக்கிறார். எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர் மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு எதிரானவர்கள்; ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், தனது வருமானத்தில் ஒரு பகுதியை மாணவர்களின் கல்விக்காகச் செலவிட்டு வருவதாகவும், தற்போது வரை 600 மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் 150 மாணவர்களுக்குக் காலை உணவு எனப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
