பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, முன்னாள் அமைச்சரும் அதிமுக முன்னணி தலைவருமான செல்லூர் கே. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “பெருந்தலைவர் காமராஜரின் சிலையைப் பராமரித்தது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான். மேலும், மதுரை மாநகரின் அடையாளங்களான பத்துத்தூண் மண்டபம், திருமலை நாயக்கர் மஹால் மற்றும் நான்கு மாசி வீதிகளை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தியது அதிமுக அரசுதான் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலம் தொட்டு, புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் காலம் வரை, வாழையடி வாழையாக அதிமுகவினர் காமராஜருக்கு மரியாதை செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
