பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோரிடம் இன்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பழனி அடிவாரத்தில் உள்ள மடத்திற்குச் சொந்தமான நிலம், போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக இது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில், சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட தகவல் அறிக்கையைத் தயார் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா அவர்கள், புகார் அளித்த அறநிலையத்துறை கண்காணிப்பாளர் முருகானந்தம், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரப் பதிவுத்துறை அதிகாரி ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணையின் மூலம், நில மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
