பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, கடந்த 4 நாட்களாக மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் கோவிந்தராவ் ஆகியோர் போராட்டக் குழுவினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்சார வாரியத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்த பணியாளர்களின் விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர், அரசுக்குச் சில மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுவதால் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்று, அண்ணா தொழிற்சங்கம், தேமுதிக மற்றும் அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தன.
இருப்பினும், தங்களைச் ஆலோசிக்காமல் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தைக் கைவிட்டதாகக் கூறி, போராட்டக் குழுவினர் கண்ணீர் விட்டு அழுதனர். நிர்வாக இயக்குனரிடம் இருந்து உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ள நிலையில், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
