தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படமும், மத்திய அரசு வழங்கும் உணவுப் பொருட்களின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக கூட்டுறவு பிரிவு மாநில ஊடகப் பொறுப்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
பாஜக கூட்டுறவு பிரிவு மாநில ஊடகப் பொறுப்பாளர் வேல்பாண்டியன் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடம் இந்த மனுவை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 34,908 ரேஷன் கடைகளும், மதுரையில் மட்டும் 1,336 ரேஷன் கடைகளும் இயங்கி வருவதாகத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி ஒரு கிலோ 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, அதில் மத்திய அரசு 28 ரூபாயும், மாநில அரசு 6 ரூபாயும் வழங்கி இலவசமாக விநியோகித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Priority Households( PHH),Antyodaya Anna Yojana (AAY) மற்றும் Non-Priority Household (NPHH) அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவச மற்றும் சலுகை விலையில் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கொண்டைக்கடலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வளவு சலுகைகளை வழங்கும் மத்திய அரசின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் ரேஷன் கடைகளில் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமரின் படத்தையும், மத்திய அரசு வழங்கும் உணவுப் பொருட்களின் இருப்பு விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையையும் அமைக்க மாவட்ட அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
