மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை மோசடியாகப் பட்டா மாற்றம் செய்து, அடமானம் வைத்த விவகாரத்தில் 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் பேரில், மோசடி மற்றும் கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகர்கோவில் சாலையில் உள்ள 'அசோகா விலாஸ்' பங்களா மற்றும் தோட்டம் தொடர்பான 1930-ஆம் ஆண்டு உயில் சாசனத்தின்படி, சொத்தை வாடகைக்கு மட்டுமே விட வேண்டும்; விற்பனை அல்லது அடமானம் செய்யக் கூடாது. ஆனால், 2016-ஆம் ஆண்டு கோவில் பெயரிலிருந்த பட்டா சட்டவிரோதமாகத் தனிநபர்கள் பெயருக்கு மாற்றப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோவில் பெயருக்கே மாற்றப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும், நீதிமன்றத் தடையை மீறி 2021-ஆம் ஆண்டு பொது அதிகார ஆவணம் மற்றும் நில அடமானப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தனிநபர்கள், முன்னாள் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Madurai
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நில முறைகேடு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நில முறைகேடு – 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப்பதிவு
