மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகள்ளழகர் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் திருவிழாவில், ஸ்ரீகள்ளழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தையொட்டி, உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்த தேர் மீண்டும் நிலை வந்தடைந்தபோது, பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு, சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் நேரலை எல்.இ.டி. திரைகள் போன்ற சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த திரளான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீகள்ளழகரின் திருத்தேரோட்டத்தைத் தரிசித்துச் சென்றனர்
- Madurai
அழகர்கோவில் ஆடிப்பௌர்ணமி திருத்தேரோட்டம்
அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகள்ளழகர் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது
