மதுரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தொகுதி மறுவரையறை மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்வது தமிழகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாக அமையும் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 'LETS CLEAN MADURAI' சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:
"அரசியல் காரணங்களுக்காகவே ஒன்றிய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவருகிறது. இதன் மூலம் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு நாடாளுமன்றத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இது சிறுபான்மை மக்களை ஒதுக்கக் கூடிய செயலாகும். தமிழகத்திற்குத் தேவையான 39 தொகுதிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்; இந்த மசோதாவை அனைவரும் ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, திமுக முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். மாறாக, மறுவரைவு மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. அப்படிச் செய்தால், அது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே திமுக செய்யும் மிகப்பெரிய துரோகமாகப் போய் முடியும். ஸ்டாலின் அவர்கள் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்கப் பார்க்கிறார்" இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
- Madurai
தொகுதி மறுவரைவு விவகாரம் – அமைச்சர் பேட்டி
தொகுதி மறுவரைவு விவகாரம் – அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
