தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரான பெண் நிர்வாகி ரோகிணி, தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துப் பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிச் தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.
தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர், அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெருங்கிய நண்பரான ரூஸ்வெல்ட், நகர செயலாளர் நிவாஸ் கண்ணன் மற்றும் சிபாஸ் ஆகியோர் கட்சியில் கூடுதல் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றித் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ரோகிணி புகார் அளித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் சிபாஸ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மாவட்ட செயலாளர் பிரைட்டர் தரப்பினர் ரோகிணியின் வீட்டிற்குச் சென்று புகாரை வாபஸ் பெறும்படியும், இல்லையெனில் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். மேலும், சமரசமானது போலப் புகைப்படம் எடுத்துக்கொண்டும் சென்றுள்ளனர்.
தொடர்ந்து பிரைட்டரின் உறவினர்கள் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுப்பதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாலியல் தொல்லைக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகளை அமைச்சர் ஸ்ரீநாத்தின் நண்பர்கள் என்பதால் காவல்துறையினர் கைது செய்யத் தயங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தன் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரி அவர் தென்மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிகாரியிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
- Madurai
தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் பெண் தவெக நிர்வாகி புகார்
தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் பெண் தவெக நிர்வாகி புகார்
