மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கல்லூரி மாணவர்களின் போராட்டத் தடை மற்றும் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நிலை குறித்து பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
குஜிலியம்பாறை தாசில்தார் சொந்த வெறுப்பின் காரணமாகவே கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்களைச் சேகரிக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாகவும், தகவல் அறிந்தவுடன் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலதிகப் பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசுக்கு இதுபோன்ற எந்த எண்ணமும் கிடையாது என்றார்.
அரசு கல்லூரி மாணவர்கள் போராடுவதற்குக் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் எனவும், இந்த விவகாரத்தில் அரசுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.
கல்லூரிகள் அனைத்தும் ஆளுநரின் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் இயங்குவதால் நிர்வாக ரீதியாகப் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், காலி பணியிடங்களை நிரப்புவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாதத்திற்குள் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இருக்க மாட்டார்கள் எனவும், பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, கல்லூரிகளை மாநில அதிகாரத்திற்குக் கொண்டு வந்தால் மட்டுமே முழுமையான நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முடியும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறினார்.
- Madurai
கல்லூரி மாணவர்களின் போராட்டம் அமைச்சர் பேட்டி
கல்லூரி மாணவர்களின் போராட்டம் & பல்கலைக்கழகங்களின் நிலை – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி
