விருதுநகர் நகரின் முக்கிய நீர் ஆதாரமான இந்து நாடார்கள் தெப்பக்குளம், பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த நிலையில், தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
விருதுநகர் நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கடந்த 1866-ஆம் ஆண்டு 25 அடி ஆழம், 330 அடி நீளம் மற்றும் 300 அடி அகலத்துடன் 5.5 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது.
நீராதாரம் மற்றும் பயன்பாடு: கடந்த 2003-ஆம் ஆண்டு வரை நிரம்பியிருந்த இத்தெப்பக்குளம், பின்னர் வறண்டு தரையைக் காணத் தொடங்கியது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் 17 போர்வெல்கள் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது.
தெப்பக்குளத்தின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வந்ததால், அதனை உடனடியாகத் தூர்வார வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது முதற்கட்டமாகத் தெப்பக்குளத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பெரிய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றித் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம், தொழிலதிபர் முரளிதரன், நகர்மன்றத் தலைவர் மாதவன், பாலகிருஷ்ணசாமி மற்றும் நகர் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து சிறப்பான முறையில் தொடங்கி வைத்துள்ளனர்.
- Virudhunagar
தெப்பக்குளம் – 21 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணிகள் தீவிரம்
விருதுநகர் இந்து நாடார்கள் தெப்பக்குளம் – 21 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணிகள் தீவிரம்
