இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பயனாளர் பதிவு முகாம் சிவகாசியில் தொடங்கியது.
சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு நிகழ்வை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்துப் பார்வையிட்டனர்.
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், அதன் பயன்கள் மற்றும் பயன்பெறும் வழிமுறைகள் குறித்துப் புகைப்படக் கண்காட்சி மூலம் பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு மற்றும் தொழிலாளர் நல வாரிய அட்டை போன்ற சேவைகளைப் பொதுமக்கள் உடனுக்குடன் பெற ஏதுவாக, அந்தந்த அரசுத் துறைகளின் சார்பில் தனித்தனி சேவை அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுப் பதிவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் ஒரு பகுதியாக, அரசு நலத்திட்டங்களின் கீழ் தகுதிபெற்ற 10 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடனுதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களைப் பார்வையிட்டுப் பயனடைந்து வருகின்றனர்.
- Virudhunagar
மத்திய அரசின் மக்கள் நலத்திட்ட விழிப்புணர்வு கண்காட்சி
சிவகாசியில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்ட விழிப்புணர்வு கண்காட்சி – ஆட்சியர் தொடங்கி வைத்தார்
