திண்டுக்கல்லில் திருமணத்திற்குச் செல்லும்போது காரின் மேற்கூரையில் வைத்துவிட்டு மறந்து கீழே விழப் பண்ணப்பட்ட 50 பவுன் நகை பெட்டி, 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து போலீசாரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பழனி சாலையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் உசிலம்பட்டியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்காகச் சொந்தக் காரில் புறப்பட்டுள்ளார். அப்போது மனைவியின் 50 பவுன் தங்க நகைப் பெட்டியைக் காரின் மேற்கூரையில் வைத்துவிட்டு, அதை மறந்து காரைக் கிளப்பிச் சென்றுள்ளார்.
திண்டுக்கல் - பழனி பைபாஸ் சாலையில் வத்தலகுண்டு இணைப்புச் சாலைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் மேலிருந்த சிவப்பு நிற நகைப்பெட்டி தவறி சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அந்தப் பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார்.
நகையைக் காணாமல் அதிர்ச்சியடைந்த அருண்குமார் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் அந்தப் பாதையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், காவி வேட்டி அணிந்த நபர் ஒருவர் பெட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
தீவிர விசாரணைக்குப் பிறகு, நகை பெட்டியை எடுத்துச் சென்றது அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி குழந்தை ராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் 20 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, வங்கி மற்றும் அவரது வீட்டிலிருந்த முழுமையான 50 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
- Dindigul
காரின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த நகை மீட்பு
காரின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு
