விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டின் பூஜை அறையில் ஏற்றிய கற்பூரம் சிதறி ஏற்பட்ட தீ விபத்தில், அடுத்தடுத்து இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியது.
விருதுநகர் குல்லூர்சந்தை செளண்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெயஸ்ரீ, நேற்று இரவு தனது வீட்டில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கற்பூரம் சிதறி மின்சார வயரில் பட்டுத் தீப்பற்றியுள்ளது. தீ மளமளவெனப் பரவியதைக் கண்ட அவர் வீட்டை விட்டு வெளியேறி அலறியடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார்.
அதற்குள் தீ வீடு முழுவதும் பரவியதுடன், வீட்டிலிருந்த 2 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து சிதறி ஓடினர்.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். எனினும், இச்சம்பவத்தில் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்துச் சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
குல்லூர்சந்தையில் கற்பூரம் சிதறி தீ விபத்து
குல்லூர்சந்தையில் கற்பூரம் சிதறி தீ விபத்து
