மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், காங்கிரஸ் கட்சியைத் தவெக 'யூஸ் அண்ட் த்ரோ' போலப் பயன்படுத்துவதாகவும் சாடினார்.
தவெக கட்சிக்கு காங்கிரஸ் ஒரு 'யூஸ் அண்ட் த்ரோ' போன்றதுதான் என்றும், இதனை வெளியில் சொல்ல முடியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தற்போது திருடனுக்குத் தேள் கொட்டியது போலத் தவித்து வருவதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் அடிப்படை நாகரிகமின்றிப் பேசுவதாகவும், மறைந்த முதல மைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை எள்ளி நகையாடும் வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், முதலமைச்சர் பார்த்துப் படிப்பதில் கூடத் தவறுகள் இருப்பதாகவும், இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பார்த்தே தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியை விடத் தற்போதைய ஆட்சியில் தான் போதைப்பொருள் புழக்கமும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்களும் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய இளைஞர்கள் திரை கவர்ச்சியால் ஏமாந்து வாக்களித்துவிட்டதாகவும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவே இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உறுதியாக உள்ளது எனவும், அதிமுகவுடன் மறைமுகமாகப் பேச வேண்டிய அவசியமில்லை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோரிடம் நாங்கள் நேரடியாகவே பேசுவோம் என்றும் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தினார்.
- Madurai
தவெக காங்கிரஸை ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல பயன்படுத்துகிறது
தவெக காங்கிரஸை ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல பயன்படுத்துகிறது – டிடிவி தினகரன்
