விருதுநகர் மாவட்டம் தாதம்பட்டியில் 'பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா' (PMKSY) நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் பழக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விவசாயத்தில் நீரைச் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் 2025 வரை 17,252 விவசாயிகளுக்கு 14,501 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு (2026-27) நுண்ணீர் பாசனம் அமைக்க 800 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.3.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து தாதம்பட்டியில் கொய்யா மரக்கன்றுகள் மற்றும் ஒண்டிப்புலி நாயக்கனூரில் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியரும் எம்பியும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- Virudhunagar
நுண்ணீர் பாசனத் திட்டம் ஆய்வு
நுண்ணீர் பாசனத் திட்டம் – எம்பி மாணிக்கம் தாகூர் & ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு
