விருதுநகரில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து 25 டன் பல்லாரி வெங்காயம் லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 'நேஷனல் கோஆப்பரேட்டிவ் கன்ஸ்யூமர் ஃபெடரேஷன்' (NCCF) நிறுவனம் மூலம் நாசிக்கிலிருந்து 25 டன் பல்லாரி வெங்காயம் லாரியில் கொண்டு வரப்பட்டு, விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை சேமிப்புக் கூடத்தில் இறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தரமாகப் பரிசோதிக்கப்பட்ட இந்த வெங்காயம் முதற்கட்டமாகத் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் வெறும் ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
வெளிச்சந்தையில் வெங்காய விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தரமான வெங்காயம் விநியோகம் செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
- Virudhunagar
ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம்
விருதுநகரில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் – ரூ.35-க்கு விற்பனை
